செய்திகள்

ஜெயலலிதா நியமித்த பதவிகளை தினகரனால் பறிக்க முடியாது: நெல்லை சுதாபரமசிவம் பேட்டி

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பலரின் பதவியையும், எனது பதவியையும் பறித்திருப்பதாக தினகரன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு செல்லாது என்று நெல்லை சுதாபரமசிவம் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளை தினகரன் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வம் ஒன்றாக இணைந்த பின்னர் தினகரனின் நடவடிக்கை தீவிர மாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியால் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி.யை நீக்கிய தினகரன் அடுத்தடுத்த அதிரடியாக அமைச்சர்கள் பொறுப்புகளையும் பறித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரம் அவர்கள் வகித்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தினகரன் அறிவித்தார்.

இதே போல மாவட்ட செயலாளர்கள் அமைப்பு செயலாளர்கள் பொறுப்புகளில் இருந்தும் பலரை தினகரன் நீக்கியுள்ளார். இதில் நெல்லையைச் சேர்ந்த சுதாபரமசிவமும் ஒருவர் அமைப்பு செயலாளர் பொறுப்பில் உள்ள அவர் எங்களை நீக்க தினகரனுக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக சுதா பரமசிவம் அளித்த பேட்டி வருமாறு:-

1998-ல் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்த நான் பின்னர் பகுதி செயலாளரானேன்

2003-ம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவியில் என்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். அதன் பின்னர் பேரவை செயலாளராக இருந்த நான் 2011-ல் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆனேன்.

அதன் பின்னர் அமைப்பு செயலாளர் பதவியை அம்மாவே எனக்கு கொடுத்தார்.

இதுபோன்று ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பலரின் பதவியையும், எனது பதவியையும் பறித்திருப்பதாக தினகரன் அறிவித்துள்ளார். இது செல்லாது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்குவதற்கு தினகரன் யார்? எனவே அவர் இஷ்டப்படி செயல்பட்டு கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதா பரமசிவம் கூறினார்.