ராயபுரம்:
ராயபுரத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் தேசிய சேமிப்பு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் தீபாவளி பரிசு பொருட்களை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று டி.டி.வி.தினகரன் கூறியதை பார்க்கும்போது அவர் எப்போது ஜோசியம் பார்க்க ஆரம்பித்தார் என்று தெரியவில்லை.
நேற்று இன்று நாளை எப்போதும் அம்மா அமைத்து கொடுத்த வழியில் எடப்பாடி ஆட்சி தொடரும் என்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், கழகங்கள் இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றியும், பரவி வரும் காவி கலாச்சாரம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜெயக்குமார் பதில் கூறுகையில், தமிழகத்தில் அனைவருக்கும் ஆட்சி அமைக்க ஆசை இருக்கும். ஆனால் அதை மக்கள்தான் முடிவு எடுக்க முடியும். எங்களுக்கு உள்ள நிறத்தில் இருந்து மாற மாட்டோம். நாங்கள் நிறம் மாறாத பூக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.