செய்திகள்

வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்: ஜெயக்குமார்

வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவாக ரூ.40 ஆயிரம் வழங்கியிருப்பது போதாது. இதை உயர்த்தி கொடுக்கவேண்டும்.

அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தான் நாம் கடைப்பிடிக்கிறோம்.

நதிகள் இணைப்பு,  ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்யப்படும் என நம்புகிறோம். இதேபோல் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது.  இந்த சாலையை நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும் நிதி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews