செய்திகள்

ஜெயலலிதா மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையம் தனது விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. #Jayadeathprobe

மாலை மலர்

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்த நிலையில், இதுபற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார். சசிகலா சிறையில் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி வருகிறார்.

ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். 

இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறியவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதற்கான பட்டியலை வழங்க வேண்டும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்திருந்தார். 

அதனை பரிசீலித்த ஆணையம், சகிசலாவுக்கு எதிராக புகார் கூறியவர்கள் யார்? என்ன மாதிரியான புகார்கள் அளித்துள்ளனர் என்ற தகவலை தர ஒப்புதல் அளித்தது. அதன்படி ஆணையத்தில் ஆஜரான 22 பேரின் விவரம் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் சசிகலா வழக்கறிஞரிடம் அளிக்கப்பட்டுள்ளது. சிவக்குமார், பாலாஜி, பூங்குன்றன் ஆகியோர் அளித்த தகவல்களை சசிகலா தரப்புக்கு அளிக்க இயலாது என்றும் கூறியுள்ளது.

விசாரணை ஆணையம் கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் அளிக்கும்படி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனால், ஆணையத்தின் விசாரணை இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. 

பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கும். அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் விசாரணைக்கு ஆஜராகினார். அதன்பின்னர், பிப்ரவரி 15-ம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.  #Jayadeathprobe #tamilnews