செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை ஆதாரம்: அப்பல்லோ நிர்வாகத்துக்கு அவகாசத்தை நீட்டித்தது விசாரணை ஆணையம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆதாரங்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை விசாரணை ஆணையம் நீட்டித்துள்ளது. #Jayadeathprobe #Apollo

மாலை மலர்

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா சிகிச்சை  தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி, அப்பல்லோ குழும தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தி ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அப்பல்லோ நிர்வாகம் கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து, ஜனவரி 5-ம் தேதிக்குள் ஆதாரங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 5-ம் தேதிக்குள் ஆதாரங்களை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதாகவும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாட்சா கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற விசாரணை ஆணையம், ஜனவரி 12-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. அன்றைய தினம் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகள் பிரீத்தி ரெட்டி சார்பில் வழக்கறிஞர் பதிரலளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் அடுத்த வாரம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதா சேஷையன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.  #Jayadeathprobe #Apollo #tamilnews