செய்திகள்

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவ கண்காணிப்பாளர் சத்தியபாமா விசாரணை ஆணையத்தில் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சத்தியபாமா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #Jayadeathprobe #apollodoctor

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்கள் 10 நாளில் விளக்கம் அளிக்கவும் சசிகலா 15 நாளில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சத்யபாமா ஜனவரி 4-ந் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி டாக்டர் சத்யபாமா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை  தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஜனவரி 12-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. #Jayadeathprobe #apollodoctor #tamilnews

SCROLL FOR NEXT