செய்திகள்

இடைத்தேர்தல்களில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு- ஜவாஹிருல்லா

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். #DMK #Jawahirullah

திருச்சி:

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK  #Jawahirullah