செய்திகள்

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மாயம் - போலீஸ் விசாரணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்தவர் முகுல் ஜெயின் (வயது 26).  இவர், கடந்த 8 ந்தேதி மாலையில் இருந்து காணாமல் போயுள்ளார். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகுலை தேடி வருகின்றனர். இது பல்கலைக்கழக மாணவர் காணாமல் போன இரண்டாவது சம்பவமாகும். 

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நஜீப் அகமது என்ற மாணவர் மஹி மாண்டவி பகுதியில் அமைந்த பல்கலைக்கழக விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.  உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த அவர் மற்ற மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து காணாமல் போனது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு பின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நஜீப்பின் தாயார் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். கடந்த ஆண்டு மே 16-ம் தேதி இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது. ஆனால் நஜீப் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.