ஜம்மு-காஷ்மீர், லடாக் 
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இருந்தாலும் கவர்னருக்கே முழு அதிகாரம்

மாநிலமாக இருந்துவந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் நிலையில், இனி அங்கு அனைத்து அதிகாரங்களும் துணைநிலை கவர்னரிடம் மட்டுமே இருக்கும் என தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி:

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும்.

அந்த 2 பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் செயல்படும். அங்கு துணை நிலை கவர்னர் நியமனம் செய்யப்படுவார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயர் பட்டியல் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் காஷ்மீர் பற்றி நன்கு அறிந்த ஒருவர் லடாக் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் செயல்படும் என்பதால் அதன் முழு கட்டுப்பாடும் மத்திய அரசு வசம் இருக்கும். மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நேரடியாக அந்த மாநிலத்துக்கு கிடைக்கும்.

இதனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு அடுத்தடுத்து நிதி ஒதுக்கீடுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு லடாக் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் இருந்தாலும் எம்.பி. பிரதிநிதித்துவம் பெற்று இருக்கும்.

ஆனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையுடன் செயல்படும். அந்த சட்டசபைக்கு தற்போது இருப்பதை விட கூடுதலாக 9 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதிக்கும் எம்.எல்.ஏ.க்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். அதுவரை அந்த இடங்கள் காலியாக இருக்கும்.

காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையுடன் செயல்பட்டாலும் அந்த யூனியன் பிரதேசத்தில் துணைநிலை கவர்னருக்குதான் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். இதன் மூலம் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் வளர்ச்சி திட்டங்கள் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு நேரடியாக செயல்படுத்தும்.

தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் காஷ்மீர் யூனியன் பிரதேசம்தான் பரப்பளவில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT