ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள ஹக்பரா எனும் ஊரை சேர்ந்த லத்தீப் என்பவர் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியதை மத்திய உளவு துறையினர் இடைமறித்து கேட்டனர்.
அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது அந்த உரையாடல் மூலம் தெரிய வந்தது.
ஜம்மு நகரில் உள்ள முக்கிய ராணுவ தளத்தை தகர்க்கவும், மற்றும் ஜம்மு நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும் அந்த தொலைப் பேசி உரையாடல் மூலம் தெரிந்தது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத இயக்கம் இந்த சதி திட்டத்தை தீட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதிகள் இன்று (சனிக்கிழமை) அந்த தாக்குதலை அரங்கேற்ற முடிவு செய்து இருப்பதும் தெரிந்தது.
இதுபற்றி காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய உள்துறை தகவல் தெரிவித்து எச்சரித்தது. இதையடுத்து ஜம்மு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள். ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் மற்றும் முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.