வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட் 
செய்திகள்

டெல்லி ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு?

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 15) துவங்கிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆறு விநாடிகள் ஓடும் வைரல் வீடியோவில் போராட்டத்தின் போது தாக்குதலுக்கு ஆளான நபர் மயக்கமுற்ற நிலையில் தூக்கி செல்லப்படும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி வீடியோவில் உள்ள மாணவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளவாசிகள் கூறி வருகின்றனர்.

எனினும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர், மாணவர்கள் போராட்டத்தின் போது உயிரிழப்பு எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகளில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

வைரல் வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக சக மாணவரான நௌஷாத் அகமது ராசா தெரிவித்தார்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.