செய்திகள்

காயம் தீவிரம்: ஜேம்ஸ் பேட்டின்சன் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கம்

ஆஸ்திரேலியா வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

கான்பெரா:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பேட்டின்சன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். 3 மாத ஓய்விற்கு பிறகு இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில், காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் ஜேம்ஸ் பேட்டின்சன் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேட்டின்சன் பேசுகையில், 'முதுகில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. குறிப்பாக எங்கள் நாட்டில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால் இன்னும் சில வாரங்களில் மருத்துவர்களின் உதவியுடன் பூரணமாக குணமடைந்த பிறகு மீண்டும் போட்டியில் பங்கேற்பேன். மேலும், இதுபோல் மறுபடியும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வேன்' என கூறினார்.

ஆஸ்திரேலியா விளையாட்டு துறைக்கான மருத்துவ பிரிவின் மேலாளர் அலெக்ஸ் கவுண்டோரிஸ் கூறுகையில், '3 மாத ஓய்விற்கு பிறகு பேட்டின்சன் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக, பந்து வீசும்போது வலி ஏற்படுவதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. பேட்டின்சன் காயத்திலிருந்து விரைவில் குணமடைந்து விரைவில் போட்டியில் பங்கேற்பார்' என நம்பிக்கை தெரிவித்தார்.