செய்திகள்

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது நினைவு தினம்: ராகுல் காந்தி, பிரிட்டன் தூதர் மரியாதை

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் தூதர் ஆகியோர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர். #JallianwalaBagh #RahulGandhi

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.  இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துயரச்சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது.  இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பிரிட்டன் நாட்டின் தூதர் டொமினிக் அஸ்க்குத் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்தார்.

இதேப்போல் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு  நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு பகுதியில் வாழும் மக்களும், பள்ளி மாணவர்களும் உயிரிழந்தவர்களுக்காக மரியாதை செலுத்தி வருகின்றனர். #JallianwalaBagh #RahulGandhi

SCROLL FOR NEXT