இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வருவதற்கு கடந்த 20-ந்தேதி விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் குல்பூஷன் ஜாதவை இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இவர்கள் இருவரும் இன்று இஸ்லாமாபாத் நகருக்கு வந்தனர்.
அங்குள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங், ஒரு இந்திய பெண் அதிகாரி உள்ளிட்டோர் துணையுடன் அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தை இன்று பிற்பகல் வந்தடைந்தனர். சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜாதவ் முன்கூட்டியே வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கிய முஹம்மது அலி ஜின்னாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ண நோக்கத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றதாகவும், இங்கிருந்து இந்திய தூதரக அலுவலகத்துக்கு செல்லும் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்றிரவு டெல்லி சென்றடைவார்கள் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.