செய்திகள்

ஜாதவை மனைவி, தாயார் சந்தித்தபோது தாலியை கழற்ற வைத்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது தாலியை கழற்ற வைத்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. 

கடற்படை பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று, ஈரான் நாட்டில் சொந்தமாக தொழில் நடத்திவந்த ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.

இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது. 

இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.  அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வருவதற்கு கடந்த 20-ந்தேதி விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து, இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் குல்பூஷன் ஜாதவை இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இவர்கள் இருவரும் நேற்று இஸ்லாமாபாத் நகருக்கு வந்தனர்.

அங்குள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங், ஒரு இந்திய பெண் அதிகாரி உள்ளிட்டோர் துணையுடன் அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தை நேற்று பிற்பகல் வந்தடைந்தனர். சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜாதவ் முன்கூட்டியே வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. கண்ணாடி அறையின் உள்பக்கம் ஜாதவ் அமர்ந்திருக்க எதிர்புறம் அமர்ந்திருந்த அவரது தாயாரும் மனைவியும் உள் இணைப்பு தொலைபேசி (இண்டர்காம்) மூலமாக பேசினர்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து டெல்லி திரும்பிய ஜாதவின் மனைவி மற்றும் தாயார் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் குல்பூ‌ஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரிய வந்துள்ளது.

விரும்பத்தகாத இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இந்த சந்திப்பு நடைபெற்ற விதம் இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் இடையிலான வார்த்தைகளுக்கும் நடத்தைக்கும் இடையிலான புரிதலை அத்துமீறும் வகையில் அமைந்திருந்ததாக நாங்கள் கருதுகிறோம். 

குல்பூஷன் ஜாதவுடனான சந்திப்பு தொடர்பாக எங்களுக்கு தெரியவந்த தகவலின்படி, ஜாதவ் மன அழுத்தமான நிலையிலும் பலவந்தமான சூழலிலுன் காணப்பட்டதாக தெரிகிறது. ஜாதவின் தோற்றம் அவரது ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் ஜாதவின் குடும்பத்தாருடைய கலாசாரம் மற்றும் மதம்சார்ந்த நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளது. தேவையே இல்லாமல் அவர்களின் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும், நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், ஜாதவுடன் அவரது தாயார் தங்களது தாய்மொழியில் பேசியதையும் அங்கிருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் தடுத்துள்ளனர். எனவே, இந்த சந்திப்பு நடத்தப்பட்ட ஏற்பாடுகளும் அதன் பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் அளித்த பேட்டிகளும் ஜாதவ் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்துதற்கான பாகிஸ்தான் அரசின் போதுமான ஆதாரமற்ற - தவறான அணுகுமுறையாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.