செய்திகள்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் இந்தியா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: சர்வதேச கோர்ட்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்திய அரசு செப்டம்பர் 13-ம்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்தாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜாதவ் வழக்கில் இந்தியா தனது தரப்பு வாதங்களை செப்டம்பர் 13-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் டிசம்பர் 13-ம்தேதிக்குள் வாதங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.