முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் காவிரியில் ஜெயலலிதாவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தலைமை தாங்கி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தினால் தமிழக மக்கள் தவிக்கின்றனர். இந்த மர்ம மரணத்தின் முடிவுகள் வரும் போது எதிரிகள் விரட்டியடிக்கப்படுவார்கள். எனது அத்தை உயிருடன் இருந்தவரை பதவிக்கோ, பணத்திற்கோ? ஆசைப்பட்டு நான் செல்லவில்லை. சசிகலா கடைசி வரை எனது அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவை இழந்து தவிக்கும் தமிழக மக்கள் சசிகலாவை விரட்டியடிப்பார்கள். ஆசியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் அரியலூர் மாணவி தற்கொலையில் எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. மாணவர்கள் நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. இதனை ரத்து செய்வதுதான் எனது கோரிக்கை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. 4 டிஎம்.சி. தண்ணீர் கொடுக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதனை மத்தியஅரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆர்.சி.கோபி, ஒன்றிய செயலாளர் மதி மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.