2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவு குறித்த அறிக்கையில் சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு விவகாரம் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது. உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.