செய்திகள்

ஐதராபாத் வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா: சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா இன்று அதிகாலை ஐதராபாத்தில் வந்தடைந்தார்.

மாலை மலர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். இந்த மாநாட்டில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா ஆகியோர் வருவதையொட்டி ஐதராபாத் நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவாங்கா இன்று அதிகாலை ஐதராபாத் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை அமெரிக்க மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இங்கு சுமார் 2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.