செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி - சானியா ஜோடி அசத்தல்

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மிடம் தோல்வியை தழுவினார்.

மாலை மலர்

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சானியா கூட்டணி அடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீனத்தைபே) ஜோடியுடன் மோத இருக்கிறது. ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை அனெட் கோன்டாவெயிட்டை (எஸ்தோனியா) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.


நடாலை தோற்கடித்த மகிழ்ச்சியில் டொமினிக் திம்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் நடாலை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் களிமண் தரை போட்டிகளில் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நடாலின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.