கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகம் உள்பட 64 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டில் நேற்று இரவு 12 மணி வரை சோதனை நடந்தது.
அதன் பிறகு அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர். இன்று காலை 5.30 மணிமுதல் அதிகாரிகள் வந்து மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டில் உள்ள 5 முக்கிய லாக்கர்களுக்கு சாவிகள் இல்லை. அந்த லாக்கர்களை திறக்க தனியார் பூட்டு சாவி செய்யும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று 2 லாக்கர்கள் திறக்கப்பட்டன. இன்று மேலும் 3 லாக்கர்கள் திறக்கப்பட உள்ளது.
இதுதவிர சிவகுமார் மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை வருமானவரி அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகளின் இன்னொரு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
மந்திரி சிவகுமாரின் தம்பியும், எம்.பி.யுமான சுரேஷ் வீட்டிலும் அவருக்கு சொந்தமான பிடதி நகரில் உள்ள சொகுசு விடுதியிலும் நடந்த சோதனை முடிந்து விட்டது. அவரது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் அவரிடம் எழுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல மந்திரி சிவகுமாரின் குருவும், ஜோதிடருமான துவாரகநாத் வீட்டிலும் நடந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
மந்திரி சிவகுமாரின் மாமனார் திம்மையா மைசூரில் வசிக்கும் வீட்டிலும் இன்று 3-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் ஆவணங்களை காட்டி அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மந்திரியின் நெருங்கிய நண்பர்கள் பாலாஜி, எட்வின் ஆகியோர் வீடுகளில் நடந்த சோதனையும் முடிவுக்கு வந்துள்ளது.
மந்திரி சிவகுமார் வீட்டில் நடந்த சோதனை இன்று மாலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து வருமானவரி துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.11 கோடியே 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர ஏராளமான வரிஏய்ப்பு ஆவணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள், ரியல் எஸ்டேட் துறையில் செய்த முதலீடுகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
மந்திரி சிவகுமார் தங்கை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டில் இன்று 3-வது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக மந்திரி சிவகுமார் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரும் பணக்காரர் ஆவார். இந்தியாவில் உள்ள மந்திரிகளிலேயே பெரும் பணக்காரர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு வெளியான ஒரு பட்டியலில் இந்தியாவிலேயே அதிக பணக்காரராக உள்ள மந்திரிகளில் சிவகுமார் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அப்போது அவர் சொத்து மதிப்பு ரூ.251 கோடியாகும்.
2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரூ.105 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தேர்தல் கமிஷனில் கணக்கு காட்டி இருந்தார்.
மந்திரி வீட்டில் நடந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறினார்.
மந்திரி சிவகுமார் வீடு மற்றும் உறவினர் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் மந்திரியிடம் இருந்து ஆவணங்களை கைப்பற்ற இன்று 3-வது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டு அவர் பயப்படமாட்டார். ஏற்கனவே மந்திரி சிவகுமார் தேர்தலில் நின்றபோது தனது சொத்து விவரங்களை தேர்தல் கமிஷனில் கணக்கு காட்டி உள்ளார். தனது தொழில் விவரங்களையும் வருமானவரிக்கு முறையாக தெரிவித்து வரி கட்டி வந்து உள்ளார்.
வருமானவரி சோதனை நடப்பது 3 நாட்களுக்கு முன்பே மந்திரி சிவகுமாருக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மந்திரி சிவகுமார் வீட்டில் நடந்த சோதனையை தொடர்ந்து அமலாக்க துறையிடம் வழக்கை ஒப்படைக்க வருமானவரித்துறை முடிவு செய்து உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி அமலாக்க துறைக்கு வழக்கு மாற்றப்பட்டால் மந்திரி சிவகுமாரின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வருமானவரி துறை அதிகாரிகள் மந்திரி சிவகுமார் மற்றும் அவரது உறவினர்களை பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.