சென்னை:
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடந்துவருகின்றன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இல்லம், கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:-
வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டுமே இந்த சோதனைகள் நடக்கிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க நடக்கும் அறுவைச் சிகிச்சையின் ஆரம்பம் தான் வருமானவரி சோதனைகள்.
இயல்பான நிர்வாக ரீதியான நடவடிக்கையைக் கூட மற்ற கட்சியினர் அரசியலாக்குகிறார்கள். அழிக்க வேண்டுமென்ற அளவுக்கு அதை கட்சியாக நினைக்கவில்லை
இந்த ஓராண்டாகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வருமானவரி சோதனைகள் தீவிரமாகியுள்ளன. மொத்தமாக 1800 அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு ஒரு குடும்பத்திடம் சொத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரெய்டு நடத்துவது மட்டும் தான் அனைவரின் கண்களுக்குத் தெரியும், அதன்பின் இருக்கும் பணி தெரியாது. தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமிருக்கிறது என்பதே தலைகுணிவுதான்
இவ்வாறு அவர் கூறினார்.