வருமான வரி சோதனை நடத்திய நிறுவனம். 
செய்திகள்

கோவையில் தங்க வியாபாரி வீடு -அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை செல்வபுத்தில் வசித்து வருபவர் விமல். இவர் தங்க கட்டி வியாபாரம் செய்து வருகிறார். கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் முதல் தளத்தில் ஸ்ரீநிதி கோல்ட் புல்லியன் என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறார்.

இன்று காலை விமல் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். 2 குழுக்களாக பிரிந்து சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் 5 அதிகாரிகளும், வீட்டில் 3 அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது அலுவலகத்தில் விமல் இருந்தார். அவரிடம் ஆவணங்களை காண்பித்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது விமல் வங்கி கணக்கில் அதிக பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும் இவரது அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக விமல் வங்கி கணக்கில் அதிக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

நகை வியாபாரி விமலிடம் விசாரித்த போது கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவன கிளைகளில் பண பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

அதன் படி கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை ரெயில் நிலையம், கவுண்டம்பாளையம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் கொசமட்டம் நிதி நிறுவன கிளை உள்ளது. அங்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

எந்த கால கட்டத்தில் எவ்வளவு பணம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews