செய்திகள்

ஜோயாலுக்காஸ் நகைக்கடைகளில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜோயாலுக்காஸ் நகைக்கடைகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நகைக்கடை குழுமம் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நகைக்கடைகள் நடத்தி வருகிறது. இதேபோல் வெளிநாடுகளிலும் கடைகள் உள்ளன.  இந்த நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்துள்ளது.

அதன் அடிப்படையில், ஜோயாலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். தமிழகம், கேரளா, ஐதராபாத், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நகைக்கடைகள், வீடுகள் என மொத்தம் 130 இடங்களில் இந்த சோதனை நீடித்தது. 

இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிறுவனத்தின் வரவு- செலவு குறித்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஜோயாலுக்காஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், போலியாக கணக்குகளை காட்டியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.