செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரியை காவிரி நீருக்காக எடப்பாடி பழனிசாமி சந்திப்பது காலம் கடந்த ஞானோதயம்: ராமதாஸ்

காவிரி நீருக்காக கர்நாடக முதல்-மந்திரியை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது காலம் கடந்த ஞானோதயம் என ராமதாஸ் கூறினார்.

மாலை மலர்

பா.ம.க. ஒருங்கிணைந்த திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் அது ஆணா, பெண்ணா என்பது பெற்றவர்களுக்கே தெரிவிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. எனினும் சில ‘ஸ்கேன்’ மையங்களில் அதை தெரிவித்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினைக்காக கர்நாடக முதல்-மந்திரியை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நினைப்பது காலம் கடந்த ஞானோதயம். இதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

பிரதமர் மோடியை தான் பார்க்க வேண்டும். எனவே தமிழக அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரதமரை பார்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அங்கு தண்ணீர் கேட்டால் கொடுப்பார்களா? இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்த வேண்டும்.

போளூரில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும்.