செய்திகள்

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது

3.2 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சிவன், நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விண்வெளி ஆய்விலும், விண்ணுக்கு செயற்கைகோள்களை அனுப்பும் பணியிலும் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

தற்போது 2 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைகோள்களை அனுப்பக்கூடிய ராக்கெட்டுகள் இந்தியாவிடம் இல்லை. எனவே அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப ஐரோப்பிய ராக்கெட்டுகளையே இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையை மாற்றவும், இந்தியாவில் இருந்தே அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை அனுப்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியிலும் இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதன் பயனாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற நவீன ராக்கெட் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்த ராக்கெட் இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இருக்கும். இதன் மூலம் 4 டன் எடையுள்ள செயற்கைகோள்களையும் இந்தியாவில் இருந்து அனுப்ப முடியும். இது தற்போதைய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட் சுமக்கக் கூடிய எடையை விட 2 மடங்கு அதிகமாகும்.

இந்த ராக்கெட் மூலம் 3.2 டன் எடை கொண்ட ஜி-சாட் 19 தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளோம். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த ராக்கெட்டுடன் கிரையோஜெனிக் என்ஜின் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுடன் ஜி-சாட் 19 செயற்கைகோளை இணைத்து விடுவோம். அடுத்த மாதம் இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த தீர்மானித்துள்ளோம். இதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.