செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு எப்.சி. அணிக்கு 6-வது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி பெற்றது. #ISL2017 #BengaluruFC #AtheleticodeKolkataFC

மாலை மலர்

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் 1-0 என பெங்களூரு முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில், 18 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக சென்னையில் மாலை 5:30 மணிக்கு தொடங்கிய மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின. இப்போட்டியின் 24-வது நிமிடம் டெல்லி அணியின் டேவிட் நிகயிடே கோல் அடித்தார். அதைத்தொடந்து 42-வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஜேஜே மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 90-வது நிமிடம், டெல்லியின் கையோன் பெர்னாண்டஸ் கோல் அடித்தார். மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படாததால், ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.