10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று புனேவில் நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - புனே சிட்டி எப்.சி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 58-வது நிமிடம் கேரளா அணியின் ஜாக்கிசந்த் சிங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 78-வது நிமிடம் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் புனேவின் எமிலியானோ அல்ஃபரோ ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
இறுதிநேர ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சிகே வினீத் கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் அந்த கோலே கேரளா அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.