செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணியை 5-0 என அபாரமாக வீழ்த்தியது எப்.சி புனே சிட்டி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை 5-0 என வீழ்த்தி எப்.சி புனே சிட்டி அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. #ISL2017 #FCPuneCity #NortheastUnitedFC

மாலை மலர்

புதுடெல்லி:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 35-வது லீக் ஆட்டத்தில் எப்.சி புனே சிட்டி, நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 8-வது நிமிடமே புனே அணியின் ஆஷிக் குருனியன் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 27-வது நிமிடம் புனேவின் மார்சிலோ பெரெய்ரா கோல் அடித்தார். அதன்பின் 45-வது நிமிடம் மார்சிலோ பெரெய்ரா தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் முதல் பாதிநேர ஆட்டத்தில் புனே அணி 3-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் மார்சிலோ பெரெய்ரா தனது ஹாட்ரிக் கோலை 

பதிவு செய்தார். அதன்பின் 88-வது நிமிடம் புனே அணியின் அடில் கான் ஒரு கோல் அடித்தார். நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணியினர் எவ்வளவு முயற்சித்தும் இறுதிவரை எந்த கோலும் அடிக்கமுடியவில்லை. இதனால் புனே அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 

இதன்மூலம் புனே அணி புள்ளிபட்டியலில், 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அடுத்ததாக நாளை நடைபெறும் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

#ISL2017 #FCPuneCity #NortheastUnitedFC