செய்திகள்

துப்பாக்கி பயிற்சியின் போது பள்ளி முதல்வரை சுட்டு கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்

கடந்த ஆண்டு கான்பூரில் பள்ளி முதல்வர் ரமேஷ்சந்திரசுக்லா ஐ.எஸ். தீவிரவாதிகளின் துப்பாக்கி பயிற்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாலை மலர்

கான்பூர்:

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் ரமேஷ்சந்திரசுக்லா. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். துப்பு துலங்கவில்லை.

இந்த நிலையில் ரமேஷ்சந்திரசுக்லாவை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற வி‌ஷயம் இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் உஜ்ஜைனி-போபால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவெடித்தது. இதுசம்மந்தமாக தேசிய புலனாய்வு படையினர் விசாரித்து வந்தனர். அப்போது இந்த குண்டை வைத்தது மத்தியபிரதேசம்- உத்தரபிரதேசத்தில் செயல்பட்டு வந்து வந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது.

அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றிவளைத்தபோது சைபுல்லா என்பவன் கொல்லப்பட்டான். அதிப்முசாபர், முகமதுடேனிஷ், பைசல்கான் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ரெயிலில் குண்டு வைப்பதற்கு முன்பு பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக கூறினார்கள்.

வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்வது, கைத்துப்பாக்கி மூலம் பயிற்சி பெற்றது போன்ற வி‌ஷயங்களை கூறினார்கள். கான்பூரில் அந்த கைத்துப்பாக்கியை வைத்து பயிற்சி செய்தபோது ரோட்டில் நடந்து சென்ற ஒருவரை குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றதாகவும் அதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போதுதான் அவர்கள் சுட்டது ரமேஷ்சந்திரசுக்லா என்பது தெரியவந்தது. அவரை அதிப்முசாபர், முகமது டேனிஷ் இருவரும் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.