கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சர்மிளா தான் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த சில மாதமாக கொடைக்கானலில் தங்கி உள்ளார்.
அப்சர்வேட்டரி என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தான் திருமணம் செய்ய உள்ள தேஸ்மந்கொட்டின்கோ உடன் வசித்து வருகிறார்.
கொடைக்கானல் நகர மக்களுக்கு இவர் யார்? என்று தெரியாததால் சாதாரணமாக நடந்து சென்றே தனது அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பொருட்களை அருகில் உள்ள கடைக்கு சென்று வாங்கி வருகிறார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது எனக்கு போராடும் மனவலிமை இல்லை. மணிப்பூர் மக்களுக்காக போராடி என் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்து விட்டேன். தற்போது கொடைக்கானலில் அமைதிக்காக வந்து இங்கேயே தங்க முடிவு செய்துள்ளேன்.
இங்குள்ள சூழ்நிலை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கொடைக்கானலில் ஆதிவாசி இன மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டாமல் உள்ளது. இவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எனது காதலரான தேஸ்மந்கொட்டின்கோவை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன். அவரை திருமணம் செய்வதற்கான அனுமதிச் சான்றிதழ்களுக்காக எதிர்பார்த்துள்ளேன். அவை கிடைத்தவுடன் எளிமையான முறையில் எனது திருமணம் நடைபெறும்.
தற்போது மணிப்பூரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.