செய்திகள்

‘கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்’ பயிற்சி மையத்தை திறந்து வைத்த பதான் சகோதரர்கள்

குஜராத்தில் உள்ள லுனாவாடாவில் தங்களுடைய நான்காவது கிரிக்கெட் அகாடமியான ‘கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்’-ஐ இர்பான் பதான், யூசுப் பதான் திறந்து வைத்தார்கள்.

மாலை மலர்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் இந்திய அணிக்காக விளையாடியவர்கள். தற்போது இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐ.பி.எல். தொடரில் யூசுப் பதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் குஜராத்தில் உள்ள லுனாவாடாவில் ‘கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்’ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான அகாடமியை திறந்து வைத்துள்ளனர். இது அவர்களுடைய நான்காவது அகாடமியாகும்.

இன்னும் சில மாதங்களுக்குள் இந்தியாவின் முக்கியமான ஐந்து நகரங்களில் அகாடமியை திறக்க முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இந்தியா முழுவதும் 20 அகாடமிக்களை திறக்க முடிவு செய்துள்ளனர்.

பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது ஆகிய இரண்டுதான் இந்த அகாடமியின் முக்கிய நோக்கம். நல்ல பயிற்சியாளர்களை உருவாக்கி, அவர்கள் வாயிலாக குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்து கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான் (சிஏபி), இயக்குனர் இர்பான் பதான் கூறுகையில் ‘‘தற்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வழிநடத்திச் செல்பவர்கள் தேவைப்படுகிறது. இளைஞர்கள் மற்றம் குழந்தைகளை இந்திய அணியில் விளையாடும் வகையில் தரமான வீரர்களாக உருவாக்கும் மையமாக சிஏபி இருக்கும்’’ என்றார்.