ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.
அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.