மொசூல்:
சிரியாவிலும், ஈராக்கின் சில பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். அதை, சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தங்களுடைய நாடாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் போரில் குதித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோசூல் நகரின் பெரும்பகுதியை ராணுவம் கைப்பற்றியது. எனினும் கிழக்கு பகுதியை அவ்வளவு எளிதில் மீட்க முடியவில்லை. 2 வாரங்களுக்கு முன்பு, இரு தரப்புக்கும் இடையே உச்சக்கட்ட போர் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை மொசூல் நகரை ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்டது. அந்த நகரின் அரசு கட்டிடங்களில் ஈராக்கின் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது.
அதைதொடர்ந்து மொசூல் நகரத்தில் இருந்து ஐ.எஸ் திவிரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த வெடிபொருட்கள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 23 வாகனங்களில் வெடி பொருட்களை நிரப்பி வைத்திருந்தனர். அந்த வாகனங்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை வீதிகளில் ஊர்வலமாக ஓட்டிச்சென்றனர். அந்த வாகனங்களை அழிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.