சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக ஈராக் ராணுவம் சில மாதங்களாக நடத்திய உச்சகட்ட தாக்குதலின் விளைவாக மோசூல் நகரம் மீண்டும் அரசின்வசமாகியுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளுக்காக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்ற தகவல் தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் திண்டாடி வருகின்றனர்.
மோசூல் நகரம் முழுவதும் இதுவரை அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது, மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. அங்கு கடத்தப்பட்ட இந்தியர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாக ஈராக் அரசும் வாக்குறுதி தந்துள்ளது.