புதுடெல்லி:
ஈரான் நாட்டின் ஏழாவது அதிபராக பிரபல இஸ்லாமிய அறிஞரும் கல்வியாளருமான ஹஸன் ரவுகானி 3-7-2013 அன்று பதவி ஏற்றார். அமெரிக்காவுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் வாயிலாக ஈரான் மீது பல்வேறு நாடுகள் விதித்திருந்த பொருளாதார தடையை இவர் தகர்த்தெறிந்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் நகருக்கு நாளை (வியாழக்கிழமை) ரவுகானி வருகிறார். தனி விமானம் மூலம் நாளை மாலை சுமார் 4 மணியளவில் பேகம்பேட் விமான நிலையம் வந்தடையும் ரவுகானி, இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
இருநாட்கள் இங்கு தங்கி இருக்கும் ரவுகானி, ஐதராபாத் அருகே கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குதுப் ஷாஹி கோபுரம் உள்ளிட்ட பழங்கால நினைவகங்களை பார்வையிடுகிறார். நகரின் பிரபல மெக்கா மசூதியில் நாளை மறுநாள் நடைபெறும் வெள்ளிக்கிழமை ’ஜும்மா’ தொழுகையில் ‘குத்பா’ பேருரை நிகழ்த்துகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் ரவுகானி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஈரான் - இந்தியா இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #tamilnews