டெஹ்ரான்:
அராபிய வளைகுடா பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான ஈரான் நாடு சில தினங்களுக்கு முன்பு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் சோதனையை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி என்று அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 14-7-2015 அன்று அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கக்கூடாது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட சர்வதேசப் பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழியை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் வகையில், சமீபத்தில், 250 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன், 500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று, எதிரியின் இலக்கை நிர்மூலம் ஆக்கவல்ல ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதித்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் இந்த தடை சட்ட வடிவம் பெறும்.
இதற்கிடையே, ஈரான் நாட்டை ஒட்டியுள்ள கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பல்களும், போர் விமானங்களும் அத்துமீறி நுழைந்து மிரட்டி வருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா நேற்று புதிய பொருளாதார தடை விதித்ததால் ஈரான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.
இதுதொடர்பாக, ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தியாளர் பஹ்ராம் கசேமி கூறுகையில், ‘அமெரிக்காவின் செயல் ஏற்புடையதல்ல, எங்களது ஏவுகணை திட்டங்களை மிக வீரியமாக நாங்கள் செயல்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.