சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும்கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளாவிய அளவில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக தற்போது உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி கொரோனா தாக்கத்தால் சீனாவில் மட்டும் 3 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 350-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.