தெஹ்ரான்:
ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிபரின் எச்சரிக்கையையும் மீறி கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் இப்போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறி உள்ளது.
இந்த வன்முறைகளில் ஏற்கனவே12 பேர் உயிரிழந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரான் நகரில் நேற்று சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி வீதிகளில் வலம் வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய ஈரானின் நஜாபாபாத் நகரில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேட்டைத் துப்பாக்கியால் அந்த போலீஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
கலவரக்காரர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக ஈரான் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது ஈரானில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாகவும், ஈரான் மக்கள் சுதந்திர வேட்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.