வாஷிங்டன்:
அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த மனிதரான ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஏவுகணை மூலம் ஈரான் தாக்கியது. இதனால் இரு நாடுகளிடையே மோதல் முற்றியது.
இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களும், முக்கிய தலைவர்களும் தங்களது நாட்டின் ராணுவ பலத்தை குறித்தும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், குறுகிய காலத்திற்குள் ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவால் உதவமுடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
‘எங்களது பொருளாதார தடைகளினால் ஈரான் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மிக குறுகிய காலத்திற்குள், மிகச் சிறந்த முறையில் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவால் உதவ முடியும். ஆனால் உதவி கேட்பதற்கு ஈரான் மிகவும் கவுரவம் பார்ப்பதுபோல் தெரிகிறது’ என டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் கூட்டு விரிவான செயல் திட்டத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு ஏராளமான தடைகளை விதித்து வருகிறது. கடந்த வாரம், நாட்டின் அணுசக்தி அமைப்பு மற்றும் அதன் தலைவர் அலி அக்பர் சலேஹி ஆகியோர் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.