செய்திகள்

கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் குவிப்பு: மும்பை வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் குவாலிபையர் 1-ல் மும்பை அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது புனே.

மாலை மலர்

அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கமே புனே அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் திரிபாதி டக்அவுட் ஆனார். 2-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்மித் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் 9 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து புனே தத்தளித்தது.


போல்டாகிய திரிபாதி

3-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரகானே 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. அடுத்து திவாரியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

டோனி முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அதிரடி காட்ட, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

டோனி 26 பந்தில் 5 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். திவாரி 48 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார். 19-வது ஓவரை மெக்கிளெனகன் வீசினார். இந்த ஓவரில் டோனி 2 சிக்ஸரும், திவாரி ஒரு சிக்ஸும், பவுண்டரியும் அடித்தனர். இதனால் 26 ரன்கள் கிடைத்தது.


புனே அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்த டோனி, திவாரி

பும்ப்ரா வீசிய கடைசி ஓவரில் டோனி இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஒவரில் 15 ரன்கள் சேர்த்தனர். கடைசி இரண்டு ஓவரில் மட்டும் 41 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.