செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் கொல்கத்தாவை சந்திக்கும் பஞ்சாப் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

மாலை மலர்

கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது. தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை எளிதில் தோற்கடித்து விசுவரூபம் எடுத்து இருக்கிறது.

அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர் பிளேயில் (முதல் 6 ஓவரில்) 105 ரன்கள் திரட்டி புதிய சரித்திரம் படைத்தது. சுனில் நரின் 15 பந்துகளில் அரை சதம் கண்டு ஐ.பி.எல். போட்டியில் அதிவேக அரைசத சாதனையை யூசுப் பதானுடன் இணைந்து படைத்தார். அதிரடியாக அரை சதம் அடித்து கிறிஸ் லின்னும் அசத்தினார். முந்தைய ஆட்டத்தில் பெற்ற சிறப்பான வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி களம் காணும்.