ஜெய்ப்பூர்:
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் (பெட்டிங்) பல்வேறு நகரங்களில் நடக்கிறது. போலீசார் தீவிரமாக கண்காணித்தாலும் `பெட்டிங்'கை அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் உள்ள பிரதாப் பகுதியில் ஐ.பி.எல். பெட்டிங் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
`பெட்டிங்' தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 செல்போன்கள், 2 லேப்-டாப்கள், 3 டெலிவிஷன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பல கோடிக்கு பெட்டிங் நடைபெற்றதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.