சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.
3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.
பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.