செய்திகள்

விருகம்பாக்கம் வங்கி கிளையில் நண்பர்களுடன் சேர்ந்து காவலாளி கொள்ளையடித்தாரா?

விருகம்பாக்கம் வங்கி கிளையில், காவலாளி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் லாக்கர்கள் உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், அந்த கட்டிடத்தில் காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த சபின்லால் சந்த் பக்கம் போலீசாரின் பார்வை திரும்பி உள்ளது.

இவர் அங்கேயே தங்கி இருந்ததால், அந்த கட்டிடத்தின் அனைத்து இடங்களையும் நன்கு அறிந்தவர். அவரது நண்பர்கள் ஆசைவார்த்தை கூறி இருக்கலாம் என்றும், அதைக்கேட்டு அவர்களுடன் சேர்ந்து சபின்லால் சந்த் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வங்கிக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நன்றாக திட்டமிட்டு சாவகாசமாக கொள்ளையடித்து இருக்கிறார்கள். பொதுவாக வங்கிகளில் லாக்கர்கள் இருக்கும் அறையின் முன் பக்க கதவு வரை மட்டுமே கண்காணிப்பு கேமரா இருக்கும். அந்த அறைக்குள் கண்காணிப்பு கேமரா இருக்காது. இதனால்தான் கொள்ளையர்கள் நிதானமாக வெல்டிங் வைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.

வங்கியில் வெல்டிங் வைத்து கொள்ளையடிப்பதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள்தான் இந்த துணிகர கொள்ளையை நடத்தி இருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, கொள்ளையடித்த பின் அவர்கள் தனித்தனி வாகனங்களில் ரெயில் நிலையம் அல்லது பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தங்கள் ஊருக்கு சென்று இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். இதனால் ரெயில், பஸ் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொள்ளை நடப்பதற்கு முன்பு, காவலாளி சபின்லால் சந்தை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வங்கிக்கு வந்து இருக்கலாம் என்றும், இதனால் அவர்களுடைய உருவங்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏற்கனவே பதிவாகி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். எனவே கண்காணிப்பு கேமரா பதிவுகளை ரெயில் நிலையம் மற்றும் பஸ்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை கொள்ளை நடந்து இருந்தால், கொள்ளையர்கள் சென்னை நகரில் இருந்து தப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கொள்ளையர்களை பிடிப்பது போலீசுக்கு பெரும் சவாலான பணியாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே விருகம்பாக்கத்தில் அடகு கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டுறவு வங்கியில் இதேபோல் கேஸ் வெல்டிங் வைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews