சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மற்றும் பணம் வைக்கும் 2 லாக்கர்களை மர்மநபர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வங்கி செயல்படும் கட்டிடத்தில் தங்கி காவலாளியாக வேலை செய்து வந்த நேபாளத்தை சேர்ந்த சபின்லால்சந்த் (வயது 45) என்பவரை காணவில்லை. அவரது அறையில் உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தது.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் சபின்லால்சந்த் தனது மகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக சபின்லால்சந்த் இந்த கட்டிடத்தில் தங்கி காவலாளியாக வேலை செய்து வந்தார். அவரது அறையை சோதனை செய்தபோது ரேஷன் கார்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சபின்லால்சந்த், அவரது மனைவி சுஸ்மா, மகன் திலு, மகள் புஷ்பா என்ற பெயர்கள் உள்ளது. மேலும் அதில் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு, இருளப்பாளையம் என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அது உண்மையான முகவரியா? அல்லது போலியான முகவரியா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதிக்கும் போலீசார் சென்றுள்ளனர். மேலும் அதே முகவரிக்கு ஆதார் கார்டும் வாங்கி உள்ளார்.
நேபாள நாட்டை சேர்ந்த இவருக்கு ரேஷன்கார்டு, ஆதார் கார்டு எப்படி கிடைத்தது? அதனை வாங்கி கொடுக்க உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சபின்லால்சந்த்தும், அவரது மகன் திலுவும் கொள்ளை அடிக்கப்பட்ட வங்கியிலேயே வங்கி கணக்கு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவத்தின்போது சனிக்கிழமை இரவு 11.30 மணி வரை வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்து உள்ளது. அதன்பிறகு வேலை செய்யவில்லை. எனவே இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை என்றாலும், சனிக்கிழமை மேல் தளத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதுவரை பொறுத்து இருந்து சனிக்கிழமை இரவு முதல் தளத்தில் இருந்த ஜன்னலை கியாஸ் வெல்டிங் மூலம் எடுத்துவிட்டு அதன் வழியாக ஏணி மூலம் தரை தளத்திற்கு சென்று லாக்கர் இருக்கும் அறைக்கு சிலிண்டர், வெல்டிங் எந்திரங்களை எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் வெல்டிங் மூலம் லாக்கர் கதவில் ஒரு நபர் செல்லும் அளவிற்கு துளையிட்டு உள்ளே சென்று நகை இருக்கும் லாக்கரை வெல்டிங் வைத்துள்ளனர். அதுவரை சபின்லால்சந்த் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கட்டிடத்தின் முன்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது போல் யாராவது வருகிறார்களா என்று கண்காணித்து வந்துள்ளார்.
லாக்கர்களை கியாஸ் வெல்டிங் செய்து உடைத்து நகையை எடுத்தபோது சிலிண்டரில் திடீரென கியாஸ் தீர்ந்து போய் உள்ளது. இதனால் 2 லாக்கர்களை மட்டும் உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
கொள்ளையன் சபின்லால்சந்த் தங்கியிருந்த அறை.
சபின்லால்சந்த் நேபாளத்திற்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தால் ஒரு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவே விமானம் மூலம் நேபாளம் விரைந்து சென்றுள்ளனர். மேலும் வங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் எந்த வாகனத்தில் சென்றார்கள்? என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வங்கி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் ஏதாவது பதிவாகி உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். #Tamilnews