ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
7 நாள் காவல் முடிந்து ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.