செய்திகள்

தர்மபுரி வாலிபர் இளவரசன் மர்ம மரணம் - விசாரணை கமிஷனின் கால அளவு நீட்டிப்பு

தர்மபுரி வாலிபர் இளவரசனின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனின் கால அளவு 60 மாதங்கள் என்று திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தர்மபுரி பகுதியை சேர்ந்த இளவரசன், திவ்யா ஆகியோர் காதலித்து வந்தனர். இளவரசனுடன் வாழச்சென்றதை தொடர்ந்து, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அந்த பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசிதழில், பொதுத்துறையின் முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமாரின் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளவரசனின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனின் கால அளவு 57 மாதங்கள் என்றிருந்தது. தற்போது அந்த கால அளவை 60 மாதங்கள் என்று திருத்த உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.