தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மிக முக்கிய பகுதியான எர்ரகாடா சாலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தந்தையே சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார்.
சமீபத்தில் இதே தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கர்பிணி மனைவியின் கண் எதிரிலேயே பிரனாய் எனும் இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவி எனும் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண், சந்தீப் எனும் தலித் இளைஞரும் சிறுவயது முதலே நட்புடன் பழகி வந்துள்ளனர். ஐதரபாத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் போது அவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. ஆனால் சாதியை காரணம் காட்டி பெண் வீட்டார் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால், கோவில் ஒன்றில் நண்பர்களின் ஆதரவுடன் கடந்த வாரம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எனினும் சந்தீப்பை விட்டுவிட்டு தங்களுடன் வந்துவிடும் படி பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென மனம் மாறிய பெண்ணின் தந்தை தம்பதிகளின் திருமணத்தை தான் ஏற்றுக்கொண்டதாக நேற்று தெரிவித்துள்ளார். பின்னர் புத்தாடை எடுத்து கொடுப்பதற்காக அவர்களை நேரில் வரும்படி அழைத்துள்ளார்.
இதை நம்பி மாதவியும் சந்தீப்பும் இருசக்கர வாகனத்தில் வந்து எர்ரகாடா சாலையில் காத்திருந்தனர். அப்போது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் தந்தை காத்திருந்த தம்பதியருக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தம்பதியரை சரமாரியாக வெட்ட தொடங்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தம்பதிகள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.
நகரின் முக்கியமான சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானது. தற்போது இக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி தெலுங்கானாவையே உலுக்கி வருகிறது.