தேசிய தடகள போட்டி 
செய்திகள்

தேசிய தடகள போட்டி 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாடு ஆதிக்கம்: முதல் 3 இடங்களை பிடித்தனர்

லக்னோவில் நடைபெற்று வரும் மாநிலங்களுக்கு இடையேயான தேசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனைகள் 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனைப் படைத்தனர்.

மாநிலங்களுக்கு இடையேயான 59-வது தேசிய தடகள போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தியது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் தமிழக வீராங்கனைகள் பிடித்து முத்திரை பதித்தனர்.

அர்ச்சனா சுசிந்திரன் 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ரேவதி 23.59 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், தனலட்சுமி 24.22 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சூர்யா 17 நிமிடம் 51.88 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 14 நிமிடம் 34.30 வினாடியில் கடந்தார்.

பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழநாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT